- Get link
- X
- Other Apps
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கெளர் 115 பந்துகளில் 7 சிக்ஸர், 20 பவுண்டரிகளுடன் 171 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார்.
90 பந்துகளில் சதமடித்தார். இதன்பிறகு ருத்ரதாண்டவம் ஆடிய ஹர்மன்பிரீத் கெளர், கார்ட்னர் வீசிய 37-ஆவது ஓவரில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 42 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது இந்தியா. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 40.1 ஓவர்களில் 245 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.
இந்த ஆட்டத்தில் 171 ரன்கள் குவித்ததன் மூலம் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார் ஹர்மன்பிரீத் கெளர். சர்வதேச அளவில் உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் 4-ஆவது இடத்தைப் பிடித்தார். அதேநேரத்தில் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் (காலிறுதி, அரையிறுதி, இறுதிச்சுற்றில்) அதிக ரன் குவித்தவர் ஹர்மன்பிரீத் கெளர்தான்.
இதுதவிர மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த ஆட்டத்தில் 90 பந்துகளில் சதமடித்த ஹர்மன்பிரீத் கெளர், அடுத்த 25 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். இந்த ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் சந்தித்த கடைசி 40 பந்துகளில் அவருடைய ஸ்டிரைக்ரேட் 257.50. அவர் கடைசி 40 பந்துகளில் 6 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்தார். லார்ட்ஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.
இதையடுத்து ஹர்மன்பிரீத் கெளருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. ட்விட்டரில் கிரிக்கெட் பிரபலங்கள் ஹர்மன்பிரீத் கெளரைப் பாராட்டி எழுதியதாவது:
சச்சின்: ஹர்மன்பிரீத் அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். ஆட்டத்தை அருமையாக முடித்துள்ளார்கள். லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்துக்கு என் வாழ்த்துகள்.
அஸ்வின்: சிறப்பான பேட்டிங். முக்கியமான ஆட்டங்களுக்கான வீராங்கனை.
சேவாக்: நாட்டுக்காக இந்தப் பெண்கள் சாதித்ததை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இறுதிப்போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
கோலி: ஹர்மன்பிரீத், என்ன ஒரு அருமையான பேட்டிங்! பந்துவீச்சாளர்களும் சிறப்பாகப் பங்களித்துள்ளார்கள்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment