Sony Xperia R1 Plus Dual

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சலுகை

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும் என்று அமைச்சர் நிலோபர் கபில் அறிவித்துள்ளார்.

தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் நிலோபர் கபில் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய சமூகப் பாதுகாப்பு திட்டப் பயன்களை வெளிமாநில தொழிலாளர்கள் பெறுவதை உறுத்தி செய்யும் வகையில் ரூ.26 லட்சம் செலவில் சிறு கணினியினை பயன்படுத்தி 254 கள அலுவலர்களால் முனைப்பு பதிவு இயக்கத்தின் வாயிலாக தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களிலேயே பதிவு செய்யப்படும்.

தொழிலாளர் துறை அலுவலர்களால் பல்வேறு தொழிலாளர் நல சட்டங்களின் கீழ் கையாளப்படும் வழக்குகளின் நிலையினைக் கண்காணிப்பதற்கும், தீர்வு செய்யப்படுவதை உறுதி செய்யவும் இணையதள வழக்கு மேலாண்மை அமைப்பு புதிதாக ஏற்படுத்தப்படும்.

விழிப்புணர்வு குறும் படம்: பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் இயக்கக அலுவலர்களுக்குப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்படங்கள் தயாரிக்கப்படும்.

2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவு மூப்பினை மீளப் பெறவும் அதன் மூலம் வேலை வாய்ப்பினைப் பெற்றிட உதவிடும் வகையில் 2017-18 ஆண்டில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். இந்தச் சலுகையினால் சுமார் 2 லட்சம் பதிவுதாரர்கள் பயன்பெறுவர்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்படும் திறன் பயிற்சிகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்படும்.

ராணுவத் தேர்வு: ராணுவ ஆள்சேர்ப்புக்கான தேர்வுகளை எதிர்கொள்ள 2,000 இளைஞர்களுக்கு ரூ.2 கோடி செலவில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் சிறப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

Comments