- Get link
- X
- Other Apps
கரன்சி வாபஸ் அறிவிப்புக்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. கள்ள நோட்டு ஒழிப்பு, கருப்பு பண ஒழிப்பு ஆகியவற்றை முன்னிட்டு மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபரில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து கரன்சிகளை மாற்றிக் கொள்ள அதே ஆண்டில் டிசம்பர் 30 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் வரி ஏய்ப்பு, கருப்பு பண பதுக்கல் ஆகியவற்றிற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது.
இந்த சூழலில் கரன்சி வாபஸ் அறிவிப்புக்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2016-17ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த மாதம் 31ம் தேதி கடைசி நாளாகும். கடைசி நாளில் மட்டும் ஏராளமானோர் ஆன் லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முயன்றதால் வருமானவரித்துறையின் சர்வர்கள் முடங்கின. இதனால் கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து வருமானவரித்துறை வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 25.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 5ம் தேதி வரை 2.82 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. மேலும் வருமான வரி வருவாய் 41.79 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் அதிகமானோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததற்கு மத்திய அரசின் கரன்சி வாபஸ் நடவடிக்கையே காரணம் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment