- Get link
- X
- Other Apps
புரோ கபடி சீசனின் முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது தமிழ் தலைவாஸ். இப்போது மீண்டும் வெற்றிக் கோட்டை நோக்கி ஓடி வந்து நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டிருக்கிறது. புரோ கபடி வரலாற்றில் தனது முதல் வெற்றியை தமிழ் தலைவாஸ் பதிவு செய்ய இன்னும் சில நாள்கள் காத்திருக்க வேண்டும்.
நேற்றைய தினம் நடந்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியுடன் தமிழ் தலைவாஸ் மோதியது. ரோஹித் குமார் தலைமையில் அக்ரஸிவ்வாக ஆடத் தொடங்கியது பெங்களூரு. அஜய் தாகூர் தலைமையில் நம்பிக்கையோடு மேட்ச்சில் விளையாடியது தலைவாஸ்.
முதல் பாதி முழுக்க ரோஹித் ராஜ்ஜியமே. ரெய்டுக்குச் செல்லும் போதெல்லாம் தமிழ் தலைவாஸ் அணியை நடுங்க வைத்தார். அவரைப் பிடிக்க முடியாமல் வரிசையாக வெளியேறிக் கொண்டிருந்தது அஜய் தாகூர் அணி. ரோஹித்திடம் சிக்கிப் படாதபாடு பட்டுக் கொண்டிருந்த தமிழ் தலைவாஸ் அணியைப் பார்க்கவே பரிதாபமாகத்தான் இருந்தது.
தலைவாஸ் அணியில் தனி ஒருவனாக அஜய் தாகூர் இருப்பார் என எதிர்பார்த்தால் நேற்றைய போட்டியில் முதல் பாதி முழுக்க ஏமாற்றமே மிஞ்சியது. முதல் பாதியில் அஜய் தாகூர் பெரும்பாலும் வெளியே உட்கார்ந்திருந்தார். அவரை உள்ளே விடக்கூடாது என்பதில் ரோஹித் படை கவனமாக இருந்தது. அஜய் தாகூர் போன்ற பிரைம் ரெய்டர் இல்லையென்றால் தமிழ் தலைவாஸ் அணி ஆட்டம் காணும் என்பதை முதல் பாதி மேட்ச் தெளிவாக எடுத்துச் சொல்லியது. முதல் பாதியில் 23 - 8 எனப் பயங்கரமான முன்னிலையோடு இடைவேளைக்குச் சென்றது பெங்களூரு புல்ஸ். நிச்சயம் புரோ கபடி வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியை பெங்களூரு பெறக்கூடும் என எதிர்பார்ப்பு எகிறியது.
நிற்க, மேலே நீங்கள் படித்ததற்கு முற்றிலும் மாறான ஆட்டத்தை பிற்பாதியில் வெளிப்படுத்தியது தலைவாஸ். இவர்கள் இவ்வளவுதான் என நினைத்த போது, நினைத்துப் பார்க்கவே முடியாத அட்டகாசமான கம்பேக் ஆட்டத்தை வெளிப்படுத்தியது அஜய் தாகூர் படை. முதல் பாதியில் வாங்கிய அடிக்கு மறுபாதியில் எகிறி எகிறி திருப்பி அடித்தது. முதல் பாதியில் கத்துக்குட்டி போல ஆடி கதறிய தலைவாஸ், இரண்டாவது பாதியில் அமரேந்திர பாகுபலியாய் எழுந்து நின்றது.
குறிப்பாகக் கடைசி 13 நிமிட ஆட்டம் அபாரம். ரெய்டிலும் சரி, டிஃபென்சிலும் சரி இரண்டு பக்கத்திலும் கூர்மையான கத்தியை வைத்துக் கொண்டு காத்திருந்தது. திடீரென தமிழ் தலைவாஸ் அணியின் எழுச்சியையும், அவர்களிடையே ஊற்றெடுத்த பாசிட்டிவ் மனநிலையையும் கண்ட பெங்களூரு சுதாரித்தது. மேட்சில் அக்ரஸிவ் ஆட்டத்தை ஆடுவதை விடுத்து புத்திசாலித்தனமாக ஆடியது.
புள்ளிகள் வித்தியாசம் அதிகமாக இருந்ததால் பெங்களூரு வீரர்கள் ரெய்டுக்கு வரும்போதெல்லாம் எல்லைக் கோட்டுக்கு அருகிலேயே நின்று கொண்டனர். போனஸ் லைன் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை. நிறைய வெற்று ரெய்டுகளை நிகழ்த்தினார்கள். இதனால் தமிழ் தலைவாஸ் விறுவிறுவென புள்ளிகளைக் குவிக்கும் வேகம் தடைப்பட்டது. எனினும் கடைசி வரை போராடியது அஜய் தாகூர் படை. குறிப்பாக கொரிய வீரர் டாங் லீ அணியில் அருமையாக ஆடினார். இக்கட்டான சூழ்நிலைகளில் அவர் பதற்றப்படாமல் புள்ளிகளை எடுத்துத் தந்தார்.
பிரபஞ்சன் நேற்று அஜய் தாகூரை விட அதிகம் ரெய்டு புள்ளிகளை எடுத்தார். நேற்று அமித் ஹூடா சொதப்பினாலும் தமிழக வீரர் அருண் பிற்பாதி ஆட்டத்தில் விழிப்புடன் ஆடினார். ஆட்டநேர இறுதியில் பெங்களூரு அணி 32 - 31 என்ற கணக்கில் வென்றது. அஜய் தாகூர் இன்னமும் தனது முழுத் திறமையையும் வெளிக்காட்டவில்லை. அவர் ஃபுல் பார்மில் ஆடினால் அணி ஊக்கம் பெறும், புள்ளிப்பட்டியலிலும் தலைவாஸுக்கு ஊட்டம் கிடைக்கும்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment