- Get link
- X
- Other Apps
எல்லைப் பகுதியில் படைக் குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் இந்திய சீன எல்லைப் பகுதியில் உள்ள டோக்லாம் பகுதியை ஒட்டி சீனா சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்திய ராணுவம் அதிரடியாக வீரர்களைக் குவித்தது.
இதில் ஆவேசமடைந்த சீனா, இதற்குப் பதிலடியாக டோக்லாம் பகுதி தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி ஏராளமான ராணுவ வீரர்களை எல்லையில் குவித்தது. இது தொடர்பான பிரச்சனை கடந்த சில வாரங்களாகப் புகைந்து கொண்டிருக்கும் நிலையில், சீன அரசு 15 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி முதல் இந்திய ராணுவத்தினர் சீன எல்லைக்குள் புகுந்து சுமார் 100 மீட்டர் தூரத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்றும், எல்லை வீரர்களின் எண்ணிக்கை 40ல் இருந்து 400 ஆக உயர்த்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், புல்டோசரை சீன எல்லைக்குள் இந்தியா நிறுத்தி அத்துமீறியுள்ளது என்றும் உடனடியாக இந்திய படைகளை இங்கிருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டோக்லாம் பகுதியில் இருந்து படைகளை குறைப்பது அல்லது திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும், சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத வரை இதே நிலையே நீடிக்கும் என்றும் இந்தியா கூறியுள்ளது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment