- Get link
- X
- Other Apps
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் புறம் பேசி பின்னர் ஒன்று சேர்ந்து கொள்வதைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியிடையே நடக்கும் சண்டைய புரிஞ்சுக்கு முடியலயேன்னு மண்டை காய்ந்து போயிருக்கிறார்கள் மக்கள்.
அதிமுகவின் இரண்டு அணிகள் இணையும் என்ற பேச்சைக்கேட்டாலே தொண்டர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் சளிப்பு தட்டிவிட்டது. இவர்கள் என்றுமே ஒன்று சேரப்போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலக்காக காத்திருக்கிறார்கள் என்று கருதப்பட்ட நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்கள் எல்லாம் முடிந்து பதவியேற்பு விழாவும் நல்ல முறையில் நடந்து முடிந்துவிட்டது.
தினகரன் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி இணைக்க கெடு முடிவதால் அவர்கள் இணையப் போவதாக கடந்த வாரம் பரபரப்பு கிளம்பியது. அப்பப்ப வெண்ணெய் திரண்டு வருவது போல இருந்தால் கடைசி நேரத்தில் அது வெறும் நுரை போல காற்றுபட்டு கரைந்து போய்விடுகிறது. அப்படித்தான் தினகரன் விடுத்த கெடுவையும் முதல்வர் பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் பார்த்துள்ளார்.
எப்போது ஒற்றுமை?
கெடு முடியுது, கெடு முடியுது என்று, மீண்டும், மீண்டும் சொன்ன தினகரனும் அதிரடியாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. நான் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு போவேன், கட்டாயம் போவேன் என்று சொன்னார் ஆனால் எப்போது என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் அவ்வபோது விமர்சிப்பதும், பின்னர் ஒற்றுமை பாட்டு பாடுவதையுமே வழக்கமாக வைத்துள்ளார்கள் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களும்.
தெளிவான முடிவு எடுக்கப்பட்டுவிட்டதா?
தமிழக அரசுக்கு எதிராக வருகிற 10ம் தேதி போராட்டம் அறிவித்த ஓ.பன்னீர்செல்வம், திடீரென போராட்டத்தை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அணிகள் இணைப்பு என்பது சாத்தியமே இல்லை என்று கறாராக சொல்லி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். அவர்கள் அணி தெளிவாக ஒரு முடிவு எடுத்துவிட்டதாகவே இது காட்டுகிறது.
சென்ட்டிமென்ட்
இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் சென்டிமென்ட்டாக பேசி ஒற்றுமைக்கான நூல் விட்டு பார்க்கிறார். அரசுக்கு எதிராக போராடுவது அம்மாவுக்கு எதிராக போராடுவது, ஒற்றுமையாக நாம் ஆட்சியை 4 ஆண்டுகள் தொடருவோம் என்று அமைதி புறாவை பறக்க விட்டுள்ளார்.
இடியாப்ப சிக்கல்
இதே போன்று அமைச்சர் செல்லூர் ராஜூவும் ஒரு படி மேலே போய் தினகரன் அணி, எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் 3 அணியும் ஒன்றுபட்டு செயல்படும் என்று கூறியுள்ளது. கடந்த 6 மாதமாக பிரிந்திருக்கும் அணிகள் இன்று சேருவோம், நாளை சேருவோம் என்று தொடர்ந்து தொண்டர்களுக்கு போங்கு காட்டி அவர்களை இடியாப்ப சிக்கலில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளார்கள்.
எப்போது முற்றுப்புள்ளி?
போகிற போக்கை பார்த்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட ஏன் சண்டை போடுகிறார்கள், எப்போது ஒன்று சேருவார்கள் என்பதை கணித்துவிடலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அதிமுகவின் கோஷ்டிகள் ஒருவருக்கு ஒருவர் திட்டிக்கொண்டு ஆடும் இந்த அரசியல் சதுரங்க விளையாட்டுக்கு எப்போது முற்றுப்புள்ளி என்பது மட்டும் முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment